Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் அலுவலகத்தில் இந்த திருட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. தற்பொழுது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் துறை ரீதியாக ஆய்வு செய்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகளிடமும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிலரை பணியிடம் நீக்கம் செய்தோம். அதன் பிறகு இது நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த இன்டென்ஷனில் ஹார்டு டிஸ்க்களை எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. இதை திருடியது யார்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ன மாதிரியான தகவல்களுக்காக இது திருடப்பட்டது என அனைத்தும் விசாரணை செய்து கண்டுபிடிக்கப்படும். மின் துறை தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதில் யாரும் தப்ப முடியாது.
உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். துறையின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b