Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 04 ஜூன் (ஹி.ச.)
இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லை பிரதமர் நரேந்திர மோடி எட்ட உள்ளார். ஜூன் 10, 2026 அன்று அவர் தொடர்ந்து 4,399 நாட்கள் பிரதமராக பதவி வகித்தவராக புதிய சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை தக்க வைத்துள்ளார்.
இதன் மூலம், பதவியில் இருந்தபடியே தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர்கள் பட்டியலில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவுக்குப் பிறகு இடம் பிடித்துள்ளார்.
மேலும், இரண்டு முழுமையான பெரும்பான்மை ஆட்சிக்காலங்களை
(2014-2019 மற்றும் 2019-2024) நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13 முதல் 1964 மே 27 வரை 4,398 நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்த நேருவின் சாதனை, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது ஜூன் 10ஆம் தேதி மோடி 4,399 நாட்களை நிறைவு செய்வதன் மூலம் அந்த சாதனையை ஒரு நாள் வித்தியாசத்தில் கடக்க உள்ளார்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம், குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் என இணைந்த பதவிக்கால அடிப்படையில், இந்தியாவில் அதிக நாட்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவராக மோடி சாதனை படைத்திருந்தார்.
தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகள், நீண்டகால நிர்வாக அனுபவம் மற்றும் தேசிய அரசியலில் நீடித்த செல்வாக்கு ஆகியவற்றின் மூலம், இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கியமான அரசியல் அத்தியாயத்தை பிரதமர் மோடி பதிவு செய்ய உள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P