பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மத்திய அரசை விமர்சித்த முத்தரசன்
சென்னை, 04 ஜூன் (ஹி.ச.) பெட்ரோல், டீசல் மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
முத்தரசன்


சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,

எண்ணெய் நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகவும், ஆனால் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பெட்ரோல், டீசல், வீட்டு மற்றும் வணிக சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இடதுசாரி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரித்தார்.

ராஜ்யசபா உறுப்பினர் பதவிகள் தொடர்பாக காங்கிரஸ் இரண்டு இடங்களை பெற்றது குறித்த கேள்விக்கு, “திமுக கூட்டணியில் இருந்ததற்காக ஒரு இடத்தையும், த.வெ.க. கூட்டணிக்கு சென்றதற்காக மற்றொரு இடத்தையும் பெற்றுள்ளனர். அதை பெறும் திறமை அவர்களிடம் உள்ளது” என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

மின்வாரிய அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் காணாமல் போனதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து, அரசு அலுவலக ஆவணங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பேசிய அவர், “புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆட்சியை நடத்துவதற்கான நிர்வாக அனுபவத்தை பெற ஆறு மாத கால அவகாசம் வழங்குவது வழக்கமான ஒன்று. ஆனால் கொலை, கொள்ளை, வன்முறை, சூறையாடல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது. அவற்றை கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மேலும், ஆட்சிக்கு வந்தவர்கள் முந்தைய அரசை குறை கூறுவதில் நேரத்தை செலவிடாமல், தங்களின் பொறுப்புகளை முழுமையாக ஏற்று மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேர்தல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என முத்தரசன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam