Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாக விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகத்தின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு கட்டண விவரங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனக் குறிப்பிட்டது.
இதனையடுத்து, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்களை பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதுடன், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களிலும் வகுப்பு வாரியாக கட்டண விவரங்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு கடந்த மே 25ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் ஜூன் 5ஆம் தேதிக்குள் கல்விக் கட்டண விவரங்களை விளம்பர பலகைகளில் வெளியிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார்.
இந்த உத்தரவுகளுக்கு எதிராக, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது அதிகார அமைப்புகள் அல்ல என்றும், அவற்றின் மீது மாநில தகவல் ஆணையத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும் வாதிடப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமை மனுவின் வரம்பை மீறி, சட்டமியற்றும் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த வழிகாட்டுதல்களை தகவல் ஆணையம் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறு கட்டாயப்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநில கல்வித் துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் ஆய்வு செய்யப்படவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முன் அறிவிப்பு அல்லது விளக்கம் கேட்காமல், குறுகிய கால அவகாசத்தில் உத்தரவை அமல்படுத்தக் கோரியது இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவையும், அதனடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு விசாரணை முடியும் வரை அவற்றை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P