விஜய்யின் திருச்சி கூட்டம் ஒரு சினிமா ஷூட்டிங் தான் - முன்னாள் அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை, 04 ஜூன் (ஹி.ச) முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், தமிழ்நாட்டில் தான் பேசுகிறோம் என
Regupathy


புதுக்கோட்டை, 04 ஜூன் (ஹி.ச)

முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பேச்சு குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

தமிழ்நாட்டில் தான் பேசுகிறோம் என்பதை மறந்து விட்டு, தமிழ்நாட்டு கோரிக்கைகளாக நாம் டெல்லியில் என்ன வைத்தோம் என்பதை மறந்து விட்டு, மேகதாது அணை சம்பந்தமாக விவசாயிகளுக்காக பேசுவதை மறந்து விட்டு, விவசாயிகள் வீதியில் வந்து பாடுவதெல்லாம் மறந்து விட்டு, ஹலோ ப்ரோ ப்ரோ என்று கத்தி விட்டுச் சென்றிருக்கிற கூச்சலை தான் திருச்சியில் பார்த்தோம்.

திருச்சி கூட்டம் ஒரு சினிமா ஷூட்டிங் தான். சினிமாவில் எப்படி 8 டூ 5 கால்ஷீட் கொடுப்பார்களோ, அதே போன்று தான் முதலமைச்சர் ஜோசப் விஜய் காலை 8 மணிக்கு வந்து விட்டு 5 மணிக்கு சென்று விடுகிறார். 8 டூ 5 கால்ஷீட் கொடுப்பதை தவிர வேறு எந்த முன்னேற்றமும் தமிழகத்தில் கிடையாது.

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, சிறுமிகள் பாலியல் பலாத்காரம் இவை எல்லாம் எண்ணில் அடங்காதவாறு நடந்து உள்ளது. காவல்துறையை நியாயமாக நடத்துவேன் என்கின்ற முதலமைச்சரின் ஆட்சியில், இத்தனை வன்கொடுமைகளும் நடந்து கொண்டு வருகிறது.

ப்ரோ, விஜய் சார் உங்களுக்கு கேட்கிறதா என்று தமிழக மக்கள் கத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு மக்களின் அவலக்குரல் கேட்கிறதா என்ற சூழ்நிலைதான் 15 நாட்களில் நடந்து உள்ளது.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் அரசியல் நகர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ரகுபதி கூறுகையில்,

நிச்சயமாக விஜயபாஸ்கர் திராவிட முன்னேற்ற கழகம் பக்கம் அணுக கூட விட மாட்டார்.

எங்களது திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் புறக்கணித்து விட்டார். தவெகவும் புறக்கணித்து விட்டது.

அதிமுகவும் புறக்கணித்து விட்டது. நடுரோட்டில் அனாதையாக நிற்கிறார்.

அதுதான் விஜயபாஸ்கரின் கதி என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN