Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 04 ஜூன் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரையில் இன்று காலை கடல் சுமார் 500 மீட்டருக்கும் அதிக தூரம் உள்வாங்கி காணப்பட்டதால், கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன.
இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேவிபட்டினம் கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக கடல் நீர்மட்டம் குறைந்ததால், கரையில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மணற்பரப்பில் சிக்கிய நிலையில் காணப்பட்டன.
படகுகளை கடலுக்குள் செலுத்த தேவையான அளவு நீர் இல்லாததால், மீனவர்கள் மீன்பிடி பணிகளை தொடங்க முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு சென்று மீன்பிடிப்பதே தங்களது முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நிலையில், இயற்கை மாற்றங்களால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். கடல் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்த பின்னரே படகுகளை கடலுக்குள் இறக்க முடியும் என்பதால், ஏராளமான மீனவர்கள் கடற்கரையிலேயே காத்திருந்தனர்.
இது குறித்து, மீனவர்கள் கூறுகையில்,
வைகாசி, ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பது வழக்கம்.
இதன் காரணமாக சில நேரங்களில் கடல் நீர்மட்டம் திடீரென உயர்வதும், சில நேரங்களில் கணிசமாக குறைவதும் இயற்கையான நிகழ்வாக நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
மேலும், கடல் உள்வாங்கும் நிகழ்வு அவ்வப்போது ஏற்பட்டாலும், இன்று காணப்பட்ட அளவிலான நீர்மட்ட குறைவு காரணமாக படகுகள் முழுமையாக தரைதட்டி நின்றது மீனவர்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி, காற்றின் வேகம் அதிகரித்த பின்னரே மீன்பிடி பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனால் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் இன்று மீன்பிடித் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN