சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - மரண தண்டனை உறுதி கோரும் வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு
மதுரை, 04 ஜூன் (ஹி.ச.) சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பான வழக்கில், 9 காவலர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மதுரை உயர் நீதிமன்றம் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 04 ஜூன் (ஹி.ச.)

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பான வழக்கில், 9 காவலர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மதுரை உயர் நீதிமன்றம் ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி சிபிஐ தரப்பில் மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஸ்ரீதர் மற்றும் தாமஸ் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கை தற்போதைய அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டுமா அல்லது அடுத்த அமர்வுக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் முடிவு எடுக்குமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam