உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு - உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு
சென்னை, 04 ஜூன் (ஹி.ச) ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் உணவு உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்
உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடு - உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு


சென்னை, 04 ஜூன் (ஹி.ச)

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் உணவு உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக உணவு பாதுகாப்புத் துறை பெரிய உணவு தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி உணவு தயாரிக்கும் மற்றும் பரிமாறும் அனைத்து இடங்களிலும் FSSAI உரிம எண் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நுகர்வோர் மற்றும் பணியாளர்கள் உணவின் நம்பகத்தன்மையை நேரடியாக சரிபார்க்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உணவு தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் ஒவ்வொரு பணியாளரும் கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று நோய்கள் மூலம் உணவு மாசுபடுவதை முற்றிலுமாக தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு உற்பத்தி தொடங்கி வினியோகம் செய்யும் வரையிலான அனைத்து நிலைகளிலும் சுகாதாரம், தரம் மற்றும் பணியாளர் பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக கெட்டுப்போன இறைச்சி உள்ளிட்ட தரமற்ற உணவுப் பொருட்களை வினியோகிப்பதோ அல்லது சமைப்பதோ சட்டப்படி குற்றம் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சம்பவம் போன்ற உணவு நச்சுத்தன்மை நிகழ்வுகள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களில் திடீர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b