Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச)
சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி குப்பை கிடங்கில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியால் விதிமீறல் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இதர வாகனங்கள் இந்த குப்பை கிடங்கு வளாகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அவ்வாறு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென குப்பைக் குவியல்கள் மற்றும் வாகனங்களுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், மூன்று தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக போராடி வருகின்றனர்.
கோடை வெயில் மற்றும் குப்பையில் உள்ள மீத்தேன் வாயு காரணமாக தீ பரவியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b