மாநிலங்களவையில் இடம் தந்திருப்பது முதலமைச்சரின் நல்லெண்ணத்தை காட்டுகிறது - அமைச்சர் ஷாஜகான்
தென்காசி, 04 ஜூன் (ஹி.ச) தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்பதற்காக வருகை தந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தென்காசி நகர பகுதியில் உள்ள தனியார் திருமண மண
Minister Shajahan


தென்காசி, 04 ஜூன் (ஹி.ச)

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்பதற்காக வருகை தந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், தென்காசி நகர பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது

பேசிய அவர் தெரிவித்தாவது.

தமிழகத்தில் மக்கள் விரும்பிய மாற்றத்தின் அடிப்படையில் தற்போதைய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் நலம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சரியான திசையில் பயணித்து வருவதாகவும் கூறினார்.

வரும் ஜூன் 5ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் சட்டமன்ற கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் மேலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்க்கும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தமிழக வெற்றி கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்றவர் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது என்றும், அதற்காக முதலமைச்சருக்கு கூட்டணி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

தேர்தல் பிரச்சார காலத்திலேயே அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி அமையும் என முதலமைச்சர் உறுதியளித்திருந்தார் என்றும், அதனை செயல்படுத்தும் வகையில் அமைச்சரவையிலும், தற்போது மாநிலங்களவையிலும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடைபெறும் குர்பானி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, குர்பானி வழங்குவதில் எந்த விதமான தவறும் நடைபெறவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இடைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், வரும் 20ஆம் தேதி சென்னையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என்றும், தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சியின் கூட்டணிகளில் பங்கேற்ற வரலாறு கொண்ட கட்சி என்றும், தற்போதைய அரசின் செயல்பாடுகளில் ஊழலற்ற நிர்வாகம், பெண்கள் உரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினரின் நலன் ஆகியவற்றில் முதலமைச்சர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப் படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய அரசு பொறுப்பேற்று பத்து நாட்களே ஆகியுள்ள நிலையில், காவல்துறையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குற்றப் பின்னணி கொண்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் சட்டம் தனது கடமையை இன்னும் சிறப்பாக செய்யும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / ANANDHAN