Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 04 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் லை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தன.
முன்னதாக, மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த அவமதிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஶ்ரீமதி சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது நீதிபதிகள்,
அவமதிப்பு வழக்குகள் ஒரு பக்கம் இருக்கட்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? இது ஜனநாயக நாடு. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். உத்தரவை செயல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், தற்போதைய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என நம்புகிறோம் என்று வாதிட்டார்.இதேவேளை, திருப்பரங்குன்றம் தர்கா நிர்வாகத் தரப்பும் தங்களையும் வழக்கில் ஒரு தரப்பினராக இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது குறித்து அரசின் இறுதி முடிவு என்ன?என்பதைத் தெரிவிக்க அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam