Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 04 ஜூன் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள அரசனபள்ளி பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான ராகவேந்திரன் மற்றும் ராஜதுரை ஆகியோர், பச்சூர் பகுதியில் சித்தார்த் அழகு நிலையம் என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடி திருத்தும் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகன் மூர்த்தி என்பவர் முடி திருத்தம் செய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் காத்திருந்ததால், சிறிது நேரம் காத்திருக்குமாறு ராகவேந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ராகவேந்திரன் மற்றும் அவரது தம்பி ராஜதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றி, இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ராகவேந்திரன் மற்றும் ராஜதுரை ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அழகு நிலையத்திற்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முடி திருத்தம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அழகு நிலைய உரிமையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam