Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 04 ஜூன் (ஹி.ச.)
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது, தோழியின் தாயாரை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரிசெல்வன் என்ற கார் ஓட்டுநர் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாரிசெல்வன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், கீரைக்கடை பகுதியில் சிறுமி மதுபோதையில் சுயநினைவின்றி கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சிறுமியின் உறவினர்கள் நடத்திய விசாரணையில், மாரிசெல்வன் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டி, மாரிசெல்வனை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த மாரி செல்வனையும் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த சிறுமியின் உறவினர்கள், காந்தி மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் திருச்சி மாநகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P