பாஜக மாறுவேஷம் போட்டாலும் தமிழ்நாட்டில் செல்வாக்கினை பெற முடியாது - கே.பாலகிருஷ்ணன்
விழுப்புரம், 04 ஜூன் (ஹி.ச.) விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியின்
Balakrishnan


விழுப்புரம், 04 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக செயல்பட்ட அண்ணாமலை, புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

பாஜகவின் இறந்த பிணத்தை உயிர் ஊட்டுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அது நடக்கவில்லை என்பதால் மாறுவேஷம் போட்டு மற்றொரு கட்சி ஆரம்பித்தாலாவது ஏதாவது செய்ய முடியுமா என முயற்சி செய்கிறார்கள்.

இந்துத்துவா சனாதன கோட்பாட்டினை அடிப்படையாக கொண்டு மத்தியில் இருக்கிற பாஜகவின் முகத்தை மாற்றி, வேறொரு பெயரில் கட்சி ஆரம்பிப்பதால் தமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கினை பெற முடியாது. மீண்டும் ஒருமுறை அண்ணாமலை தோல்வியை தான் சந்திக்க போகிறார்.

கர்நாடாக முதலமைச்சராக உள்ள சிவக்குமார், நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் போதே மேகதாதுவில் அணையை கட்டியே தீருவேன் என சபதம் ஏற்கிற வகையில் செயல்பட்டார். மேகதாதுவில் அணைக் கட்டுவது ஒரு மாநில பிரச்சனை மட்டுமல்ல. காவிரி என்பது பல மாநிலங்களுக்கு சொந்தமானது.

காவிரி ஆற்றின் மேல் பகுதியில் அணைக் கட்டுவது என்பது கர்நாடக அரசு மட்டுமே முடிவெடுக்க முடியாது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணைக் கட்ட வேண்டும் என்று கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதிக்கத்தை, செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதால் டி.கே.சிவக்குமார் மேகதாது பிரச்சனையை எழுப்பியிருக்கிறார்.

அதே அரசியல் ஆதாயத்தை பெற வேண்டுமென மத்திய அரசும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேகதாதுவில் அணைக் கட்டும் முயற்சியை தமிழநாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், தமிழக அரசும், மக்களும் சேர்ந்து முறியடிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இந்த மாத கடைசி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ நடக்கலாம்.

தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரின் ஆளுநர் உரையிலேயே தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் இடம் பெற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பெண்களுக்கான உதவித்தொகை, பணி நிரந்தரம், காலி இடங்களை நிரப்புதல், விவசாயிகளுக்கான அறிவிப்புகளாக இருக்க வேண்டும்.

இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கு ஆதரவு அளிப்போம் என்பது இடைத்தேர்தல் அறிவிக்கும் போது சொல்கிறோம்.

5 தொகுதிகளுக்கு தான் இடைத்தேர்தல் வருமா அல்லது 25 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருமா? எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்பதே தெரியாமல் கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN