Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு இளங்கலை சட்டப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று, ஜூன் 5, 2026 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பி.ஏ.எல்.எல்.பி., பி.காம்.எல்.எல்.பி., பி.பி.ஏ.எல்.எல்.பி., பி.சி.ஏ.எல்.எல்.பி. உள்ளிட்ட ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு கடந்த மாதம் முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று நள்ளிரவுக்குள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் இணையதளத்தில் ஏற்படக்கூடிய அதிகப்படியான பயன்பாடு மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடைசி நாளில் அவசரமாக விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தவறுகள், ஆவணங்களை பதிவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் தடங்கல்கள் ஆகியவை விண்ணப்பம் நிராகரிக்கப்பட வழிவகுக்கும் என்பதால், மாணவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருந்து, விவரங்களை சரிபார்த்து பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு பெறப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும் பல்கலைக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b