Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 05 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாநில வளர்ச்சியை முன்னேற்றும் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமராவதியில் ‘அமராவதி ஐ’ அமைப்பது, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 125 நாட்களாக உயர்த்துவது உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்கள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.
லண்டனில் உள்ள ‘லண்டன் ஐ’ மாதிரியில், கிருஷ்ணாn நதிக்கரையில் 6 ஏக்கர் பரப்பளவில் ‘அமராவதி ஐ’ என்ற சுற்றுலா ஈர்ப்பு மையம் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் தனியார் பங்களிப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அமராவதி நகருக்கு சர்வதேச அளவில் புதிய அடையாளம் கிடைக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமராவதி தலைநகர் மேம்பாட்டுப் பணிகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. உயர்நீதிமன்ற வளாக அழகுபடுத்தும் பணிகளுக்கு ரூ.547 கோடியும், உயரதிகாரிகள் குடியிருப்புகளில் நவீன வசதிகள் ஏற்படுத்த ரூ.94.90 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச மாநாட்டு மையம் அமைக்க 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஸ்கார் அண்ட் அஜீவிகா மிஷன் கிராமின்’ (VBG-RAMAJI) திட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன் கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் 125 நாட்களாக உயர்த்தப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ரூ.7,675 வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்த புதிய விமானக் கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புதிய விமான நிலையங்கள், நீர்விமான தளங்கள் அமைப்பதுடன், விமான உற்பத்தித் துறையில் முதலீடுகளை ஈர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுற்றுலா வளர்ச்சிக்காக விசாகப்பட்டினம் மற்றும் சூர்யலங்கா கடற்கரை பகுதிகளில் ‘பீச் ஷாக்’ அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவா மாதிரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
போலவரம் இடது பிரதான கால்வாய் திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.352.6 கோடியில் இருந்து ரூ.796.66 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அகரிகோல்ட் மோசடி வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு 21 புதிய பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஸ்ரீ சிட்டியில் புதிய தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்தம், சர்வதேச யோகா தின விழாக்களுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவுகள் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA