Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்கு பையில் வைத்து துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் அருகே செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சாக்கு பையில் போட்டு துன்புறுத்தியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், துன்புறுத்தப்பட்ட குழந்தையின் தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் கலைச்செல்வி மீது குழந்தையை துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam