Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாட்டின் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 உயர்சிறப்பு மருத்துவ இடங்களில் 219 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளில் மாநில ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருந்த இடங்கள் அனைத்தும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் அந்த இடங்கள் நிரப்பப்பட்டதால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, 2024ஆம் ஆண்டு 119 இடங்களும், 2025ஆம் ஆண்டு 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு செல்லாமல் தடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மாநில ஒதுக்கீட்டில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதிலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அவற்றை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க மறுத்து, இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்ததாக அமைச்சர் கூறினார்.
ஆனால், ஒன்றிய அரசின் தரப்பில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே 29ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 151 இடங்களையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து மாநில இடங்களும் தமிழ்நாட்டு மருத்துவர்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், அதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசின் சார்பில் ஜூன் 4ஆம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண் ராஜ் கூறினார்.
மேலும், கிராமப்புற மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதிலும், மாநில உரிமைகள் சார்ந்த இட ஒதுக்கீட்டு கொள்கையிலும் தமிழக அரசு தொடர்ந்து உறுதியாக செயல்படும் என அவர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ