Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 05 ஜூன் (ஹி.ச)
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு சீற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளனர்.
அருவிப் பகுதியில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாலும், பாறைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாலும், எதிர்பாராத அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழையின் தீவிரம் குறைந்து, நீர்வரத்து சீரான நிலைக்கு திரும்பிய பின்னரே மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், அதுவரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்கு வருவதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தடை உத்தரவையும் மீறி அருவியில் இறங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b