Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 05 ஜூன் (ஹி.ச.)
தமிழக பாஜக அரசியலில் முக்கிய திருப்பமாக கருதப்படும் வகையில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.
அவரது விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அண்ணாமலை, தமிழகத்தில் பாஜகவின் முக்கிய முகமாக உருவெடுத்தார்.
மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, கள அரசியல் செயல்பாடுகள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியவர் என்ற அடையாளத்தை பெற்றிருந்தார்.
அண்ணாமலையின் விலகல், தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், அவரது விலகல் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அண்ணாமலையின் விலகலுக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பு மாற்றங்கள், தலைமைப் பொறுப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P