மின்வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு - பெங்களூருவில் 34 ஹார்ட் டிஸ்க்குகள் மீட்பு
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய தலைமை அலுவலக ஹார்ட் டிஸ்க் திருட்டு வழக்கு - பெங்களூருவில் 34 ஹார்ட் டிஸ்க்குகள் மீட்பு


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் அலுவலகத்தில் இந்த திருட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் துறை ரீதியாக ஆய்வு செய்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்வாரியத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகளிடமும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட கோபிநாத் என்பவரிடம் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் பெங்களூருவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையின் அடிப்படையில், கைதான கோபிநாத்தை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் சோதனை நடத்தியபோது, மின்வாரிய அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட 34 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஹார்ட் டிஸ்க்குகளில் மின்வாரியத்தின் முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகள் இருந்திருக்கலாம் என்பதால், இந்த மீட்பு நடவடிக்கை வழக்கில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.

ஹார்ட் டிஸ்க்குகளை பறிமுதல் செய்த பின்னர், கோபிநாத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகளை கோபிநாத் யாரிடம் விற்பனை செய்தார் அல்லது விற்க முயன்றார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நபரையும் போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

மின்வாரியம் போன்ற அரசின் முக்கிய துறையின் தலைமை அலுவலகத்திலேயே ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், 34 ஹார்ட் டிஸ்க்குகளும் மீட்கப்பட்டிருப்பது விசாரணைக்கு வலு சேர்த்துள்ளது.

இந்த திருட்டின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, தரவுகள் திருடப்பட்டனவா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b