தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் - பருவமழையை எதிர்கொள்ள முழு தயார் நிலையில் இருக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. தென்மேற்குப் பருவமழை மே 16 முதல் தென் அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடங்கி, ஜூன் 4
Vj


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.

தென்மேற்குப் பருவமழை மே 16 முதல் தென் அந்தமான் கடல் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடங்கி, ஜூன் 4 முதல் தமிழ்நாட்டிலும் பெய்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி,

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவு பதிவாக 80 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்கள், பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கமளித்தனர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,

எந்தவொரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் மாவட்ட நிர்வாகங்களும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகளைத் தவிர்ப்பதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும், மீட்பு உபகரணங்கள், முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தேவைப்படும் பகுதிகளில் மீட்புப் படையினரை முன்கூட்டியே நிலைநிறுத்தவும், நிவாரண மையங்களை முழுமையாகத் தயார்நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டது.

நிவாரண மையங்களில் மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மழைநீர் தேக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட மழைக்கால பாதிப்புகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பருவமழைக் காலங்களில் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், அறுந்து விழும் அபாயத்தில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள் மற்றும் மின் கோபுரங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நீர்நிலைகள் தூர்வாருதல், ஆகாயத் தாமரைகளை அகற்றுதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் அதற்குள் நிறைவு செய்து எத்தகைய பேரிடர் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ