Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 05 ஜூன் (ஹி.ச.)
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அடுத்த பனங்குடி பகுதியில், காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து விவசாயிகள் இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, கர்நாடக துணை முதல்வர்
D. K. சிவக்குமார் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், இது தமிழ்நாட்டின் நீர்வள உரிமையை பாதிக்கும் நடவடிக்கையாகும் என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மேகதாட்டு அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளதாகவும், இதன் விளைவாக நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் எச்சரித்தனர்.
போராட்டத்தின் போது பேசிய விவசாயிகள் தமிழ்செல்வன் மற்றும் சக்திவேல், மேகதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு போதுமான அழுத்தம் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக சட்ட மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் உரிமையை பாதுகாக்கத் தவறுவதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர். உருவபொம்மை எரிப்பு சம்பவத்தால் பனங்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் மீண்டும் அரசியல் மற்றும் விவசாயிகள் மத்தியில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பிரச்சினையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P