கர்நாடக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு - நிதி, பணியாளர் துறைகளை தக்கவைத்துக் கொண்ட முதல்வர் டி.கே. சிவகுமார்
பெங்களூரு, 05 ஜூன் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை முதல்வர் டி.கே. சிவகுமார் ஒதுக்கியுள்ளார். இதில் முக்கியமான நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளை அவர் தனது வசமே வைத
டி.கே. சிவக்குமார்


பெங்களூரு, 05 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை முதல்வர் டி.கே. சிவகுமார் ஒதுக்கியுள்ளார்.

இதில் முக்கியமான நிதித்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைகளை அவர் தனது வசமே வைத்துக் கொண்டுள்ளார்.

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, சில அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்படவிருந்த துறைகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததே காரணம் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

துணை முதல்வர் ஜி. பரமேஸ்வராவுக்கு வருவாய்த் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு வீட்டுவசதி துறையுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறைகளும் வழங்கப்பட்டுள்ளன.

முந்தைய அமைச்சரவையில் இருந்த சிலர் தாங்கள் வகித்த துறைகளையே தொடர்ந்தும் பெற்றுள்ளனர். கே.ஜே. ஜார்ஜ் எரிசக்தித் துறையைத் தக்கவைத்துக் கொண்டதுடன், சுற்றுலாத் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எம்.பி. பாட்டீல் பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் துறையையும், சதீஷ் ஜார்கிஹோலி பொதுப்பணித்துறையையும் தொடர்ந்து கவனிக்க உள்ளனர்.

அதேபோல், கே.எச். முனியப்பா உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையையும், சரண் பிரகாஷ் பாட்டீல் மருத்துவக் கல்வித் துறையையும் தொடர்ந்து நிர்வகிக்க உள்ளனர்.

பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கிருஷ்ண பைரே கௌடாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையை பைரதி சுரேஷ் கவனிக்க உள்ளார். சுகாதாரத் துறை யூ.டி. காதர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான யதீந்திர சித்தராமையாவுக்கு நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஈஸ்வர் காந்த்ரே ஊரக வளர்ச்சித் துறையை கவனிக்க உள்ளார்.

குறிப்பாக, யூ.டி. காதர் ஏற்கனவே 2013 முதல் 2018 வரை சித்தராமையா தலைமையிலான அரசில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், 2023 முதல் 2026 மே மாதம் வரை கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.

புதிய அமைச்சரவைக்கான இலாகா ஒதுக்கீடு வெளியாகியுள்ள நிலையில், சில அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P