Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனங்களில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அமைச்சராக இருந்த காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) அனுப்பிய தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அந்த உத்தரவை செயல்படுத்தாமல் தாமதப்படுத்தியதாகக் கூறி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உள்ளிட்ட வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது வழக்குப்பதிவு செய்திருப்பதாக நேரு தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,
அடுத்த விசாரணை வரை எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனுவை தற்போதைய தமிழக அரசு திரும்பப் பெறுவதாக தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ