Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 05 ஜூன் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வீட்டின் பின்புறம் கஞ்சா செடிகளை வளர்த்ததாக டிராக்டர் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அருகே பண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக பாரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் இளவரசி தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், வீட்டின் பின்புறத் தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கௌரிசங்கர் முன்னிலையில் சுமார் 32 கஞ்சா செடிகளை போலீசார் வேரோடு பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ரமேஷிடம் விசாரணை நடத்தியபோது, “இது கஞ்சா செடி அல்ல; மாடுகளுக்கு ஜீரணக் கோளாறு ஏற்படாமல் இருக்க வளர்க்கப்படும் ஒரு வகை மூலிகைச் செடி” என விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்டவை கஞ்சா செடிகள்தான் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மூலிகைச் செடி என்ற பெயரில் வீட்டின் பின்புறம் கஞ்சா வளர்த்ததாக கூறப்படும் டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam