Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் துண்டு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு செல்லும் படிக்கட்டு அருகே நீல நிற சூட்கேஸ் ஒன்று சந்தேகத்திற்கிடமாக கிடந்துள்ளது.
அதிலிருந்து துர்நாற்றம் வீசியதை கவனித்த பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே போலீசார் சூட்கேஸை திறந்து சோதனை செய்தபோது, அதற்குள் ஆண் ஒருவரின் உடல் பகுதி மட்டும் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், உடல் கொடூரமாக துண்டிக்கப்பட்டிருந்ததுடன், தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சூட்கேஸில் ரத்தக்கசிவு எதுவும் இல்லாததால், வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுகளாக வெட்டப்பட்ட பின்னர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறியும் வகையில் சென்னை மற்றும் அண்டை மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான காணாமல் போனோர் புகார்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் உடல் துண்டு மீட்கப்பட்ட சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam