Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை இடம் காலியானது.
இந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், அந்தக் கட்சி ஆதரவு பெறும் வேட்பாளரின் வெற்றி உறுதியாகக் கருதப்படுகிறது. மேலும், வேறு கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாத பட்சத்தில், தவெக ஆதரவு பெற்ற வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், மாநிலங்களவை இடத்தை தனது கூட்டணிக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ்-க்கு தவெக ஒதுக்கியது. இதையடுத்து, தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரவீன் சக்ரவர்த்தி தனது சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் கூட்டணியின் (TVK, INC, VCK, IUML, CPI, CPM) முதல் மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை பெருமையாகவும், மிகப்பெரிய பொறுப்பாகவும் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மீது நம்பிக்கை வைத்துள்ள ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக செயல்படுவேன் என உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P