Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 05 ஜூன் (ஹி.ச.)
புதுச்சேரியில் இந்தத் தடை வரும் ஜூன் 14-ம் தேதியுடன் முடிகிறது. இச்சூழலில் மீனவர் கூட்டுறவு கூட்டமைப்புக்கான டீசல் தற்போதைய சில்லறை விற்பனை நிலைய விலைகளுக்குச் சமமான விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் புதுவை முதல்வர் கூறியிருப்பதாவது,
புதுச்சேரியின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்று கடல் மீன்பிடித் தொழில். புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இங்கு சுமார் 450 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் இருக்கின்றன. இந்தப் படகுகளுக்கு எரிபொருள் தேவைகளை புதுச்சேரி மாநில மீனவர் கூட்டுறவு சங்கம் பூர்த்தி செய்கிறது.
புதுச்சேரி தேங்காய்த் திட்டு மீன்பிடித் துறைமுகம் மற்றும் ஏனாமில் உள்ள சாவித்திரி நகர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய இடங்களில் இந்தச் சங்கம் டீசல் விற்பனை நிலையங்களை இயக்குகிறது. பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளுக்கு டீசல் வழங்குவதற்காக மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. இந்த விற்பனை நிலையங்கள் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் லிட்டர் டீசலை விநியோகம் செய்கின்றன.
மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு இணையான விலையில் டீசல் வழங்கும் ஒரு சிறப்பு ஏற்பாட்டை நீட்டித்தது. இது மார்ச் 2026 வரை அமலில் இருந்தது. சமீபத்தில் டீசல் விலையில் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, மொத்த நுகர்வோர் விலைகளுக்கும் சில்லறை விற்பனை நிலைய விலைகளுக்கும் இடையிலான வேறுபாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
இது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களின் செயல்பாட்டுச் செலவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. மீன்பிடிச் செலவினங்களில் எரிபொருளே மிகப்பெரிய அங்கமாக உள்ளது. தற்போதைய விலை வேறுபாடு, மீன்பிடி நடவடிக்கைகளின் பொருளாதார சாத்தியக் கூறுகளைப் பாதித்துள்ளது.
மீனவர்கள் எதிர்கொள்ளும் குறைந்து வரும் லாபம், ஏற்ற இறக்கமான மீன்பிடி அளவு மற்றும் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள் ஆகியவற்றின் பின்னணியில் இந்தச் சுமை குறிப்பாகக் கடுமையாக உள்ளது.
எனவே, மீனவர் கூட்டுறவு கூட்டமைப்புக்கான டீசல் தற்போதைய சில்லறை விற்பனை நிலைய விலைகளுக்குச் சமமான விலையில் வழங்க வேண்டும். மாற்றாக, பொருத்தமான சிறப்பு விலை நிர்ணய முறை அல்லது மானிய ஏற்பாடு அளிக்க பரிசீலிக்க வேண்டும்.
என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b