Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 05 ஜூன் (ஹி.ச.)
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயத்தின் 119-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
விழாவையொட்டி காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு அருள்செல்வம் இராயப்பன் தலைமை தாங்கினார். இதில் பசிலிக்கா அதிபர் பிச்சைமுத்து, துணை பங்குதந்தை வின்சென்ட், ஆன்மீக தந்தை ஆரோக்கியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக பேராலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து ஆலய கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பெருவிழாவை முன்னிட்டு அடுத்தடுத்த தவ நாட்களில் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. மேலும், வரும் 14-ம் தேதி ஆடம்பர தேர்த்திருவிழாவும், 15-ம் தேதி கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு பெருவிழாவிற்காக புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam