கல்விக் கட்டண விவரங்களை பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிடும் உத்தரவு -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.) தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அ
உயர்நீதிமன்றம்


தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.)

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் விளம்பர மற்றும் அறிவிப்பு பலகைகளில் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் கடந்த மே 25-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 5-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை வெளியிடுமாறு அனைத்து தனியார் நர்சரி, தொடக்க, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பினார்.

இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய வாரிய பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்றும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு, தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையிலேயே கல்விக் கட்டண விவரங்களை வெளியிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகளே வழக்கு தொடர முடியும்; சங்கத்தின் சார்பில் மனுத் தாக்கல் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது. மேலும், நடைமுறையில் உள்ள விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயம் என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம். தண்டபாணி, கல்விக் கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது எனக் குறிப்பிட்டார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவுகளிலும் கூட, பொதுநலன் கருதி தகவல்களை வெளியிட வேண்டிய அவசியம் இருப்பதாக தகவல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல; அதன் விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கலாம்” எனக் கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக ஜூன் 18-ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam