காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - கடலூரில் தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது
கடலூர், 05 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகரன், வயது 57, அவரது சொந்த மகனால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மகன் ராஜாராமனை காவல்துறையினர் கைது
Son arrested for stabbing father to death


கடலூர், 05 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகரன், வயது 57, அவரது சொந்த மகனால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அவரது மகன் ராஜாராமனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், ராஜாராமன் தனது காதலுக்கு தந்தை குணசேகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனை மீறி காதலியை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை குணசேகரன், குடும்பத்தை மீறி திருமணம் செய்துகொண்டதால் சொத்தில் எந்த பங்கும் தரமாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நிலவி வந்துள்ளது.

இந்த முன்விரோதத்தின் உச்சகட்டமாக, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜாராமன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தை குணசேகரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலூர் காவல்துறையினர், குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோட முயன்ற மகன் ராஜாராமனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காதல் திருமணத்தால் ஏற்பட்ட சொத்து தகராறே கொலைக்கு காரணம் என ராஜாராமன் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காதலுக்காக பெற்ற தந்தையையே மகன் கொலை செய்த இந்த சம்பவம் பத்திரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b