Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
பத்திரப்பதிவு பணிகளில் பொதுமக்களிடம் கூடுதல் பணம் வசூலிப்பது, இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவது உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி உத்தரவின் பேரில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
திருவள்ளூர், கூடுவாஞ்சேரி, விருத்தாசலம், செம்பியம், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மொத்தமாக மாநிலம் முழுவதும் நடந்த இந்த சோதனைகளில் ரூ.37.75 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் மிகக்குறைந்த அளவாக ரூ.1,020 பிடிபட்டது. அதேவேளையில், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.3,300 கைப்பற்றப்பட்டது. மற்ற அலுவலகங்களில் இதைவிட அதிக அளவில் பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முறைகேடுகளில் நேரடியாக ஈடுபட்ட சார்பதிவாளர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும், துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் ஆதாரங்கள் குறித்து விரிவான விசாரணை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் ஊழலை ஒழிக்கும் நோக்கில் இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b