Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
வெற்றி தமிழகம் என்ற பெயரில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (05/06/2026) தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிதி, தொழில்முதலீடு சார்ந்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பட்ஜெட், கவர்னர் உரை, மேகதாது, டாஸ்மாக், நிதி குறித்த வெள்ளை அறிக்கை, மகளிருக்கான ரூ.2500 குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது,
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை குறித்து முதலமைச்சர் வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளார் மேலும் பல்வேறு துறைகளுக்கு துறை சார்ந்த குறிப்பிட்ட அளவில் திட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
போதைப் பொருட்களை ஒழிக்கக் கூடிய திட்டங்கள், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்திற்கு 37 திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த 37 திட்டங்களை துறை சார்ந்த அமைச்சர்கள் செயல்படுத்த வேண்டும். அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மதுவிலக்கு தீர்வைக்கு 30 திட்டங்கள், வேளாண் துறைக்கு 27 திட்டங்கள், கால்நடை, மீன்வளம் பால்வளத் துறைக்கு 27 திட்டங்கள் என மொத்தம் 436 திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களையும் முதல்வர் அளித்துள்ளார்.
அதேபோல மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.
இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b