புதிய கட்சி தொடங்கினால் அண்ணாமலைக்கு வாழ்த்துகள் – திருமாவளவன்
சென்னை, 05 ஜூன் (ஹி.ச.) கண்ணியமிக்க காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு
VCK Thirumavalavan


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)

கண்ணியமிக்க காயிதே மில்லத்தின் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்பிக்கை தெரிவித்த அவர், காயிதே மில்லத்தின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அவரது பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி தனது பதிவில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி குறித்து குறிப்பிட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு பிரவீன் சக்கரவர்த்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்ததாகவும், தாம் வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

விசிக பெயர் அந்த கூட்டணியில் இடம்பெற்றிருப்பது குறித்து முன்கூட்டியே தெரியாது என்றும், இனிமேல் அதுகுறித்து உரையாடல்கள் நடைபெறலாம் என்றும் கூறினார்.

அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக,

பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது அண்ணாமலை சிறப்பாக பணியாற்றினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவர் ஏன் கட்சியில் இருந்து விலகினார் என்பது தெரியாமல் கருத்து கூறக் கூடாது. அவர் புதிய கட்சி தொடங்கினால் அவருக்கு வாழ்த்துகள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிறகு கூட்டணி மாற்றங்கள் நடைபெற்ற நிலையில், சில கட்சித் தொண்டர்களால் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் எதிர்வினைகள் வெளிப்படுவது இயல்பானது என்றும், தலைவர்கள் ஒருமித்த கருத்தில் இருந்தாலும் அந்த புரிதல் இன்னும் தொண்டர்களிடையே முழுமையாக உருவாகாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் வன்னியரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும், சமூக நீதி மற்றும் சமூக-பொருளாதார நிலை தொடர்பான முழுமையான தரவுகளை சேகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வன்னியரசு நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,

அதுவும் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ