திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் தரிசன டிக்கெட் முறைகேடு,அதிகாரிகள் கண்காணிக்காதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி
திருச்செந்தூரில், 05 ஜூன் (ஹி.ச.) திருச்செந்தூரில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.100 கட்டண விரைவு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.25.24 லட்சம் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் அடிப்படைய
சென்னை உயர்நீதிமன்றம்


திருச்செந்தூரில், 05 ஜூன் (ஹி.ச.)

திருச்செந்தூரில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.100 கட்டண விரைவு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.25.24 லட்சம் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலில் தற்காலிக பெண் ஊழியராக பணியாற்றிய மேனகா என்பவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், கணினி டிக்கெட்டுகளை முறையாக சரிபார்க்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, “ரூ.25 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதை உயர் அதிகாரிகள் முறையாக கண்காணிக்காதது ஏன்? திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களால் கிடைக்கும் வருமானம் சரியாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வது அதிகாரிகளின் கடமை அல்லவா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த முறைகேடு தொடர்பாக உண்மையில் என்ன நடந்தது, அதில் மனுதாரர்களின் பங்கு என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த விவகாரம் முருக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam