Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 05 ஜூன் (ஹி.ச.)
தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளுக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவது, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு தினமும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மட்டும் 13 அடி உயர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல, நெல்லை மாவட்டத்தின் ஜீவநாடியாக விளங்கும் பாபநாசம் அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் சுமார் 9 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவை விரைவில் எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட அணைகள் தற்போது வேகமாக நிரம்பி வருவதால், பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கார், பிசானப் பருவ சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதால், விவசாயப் பணிகளை தீவிரப்படுத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து சீராக உள்ளதால், குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையின் இந்த தீவிரம், தென் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b