Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இந்த விவகாரத்தில் தனக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகளை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் தரப்பு வாதங்கள் அனைத்தையும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன் வைக்கலாம் என உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அனைத்து இடைக்கால தடைகளையும் நீதிபதிகள் நீக்கி உத்தரவிட்டனர்.
அதேவேளையில், ஆவணங்கள் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனுக்கு முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறுவதாக அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான தனது சட்டப் போராட்டத்தை ஆகாஷ் பாஸ்கரன் இனி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b