Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஜூன் (ஹி.ச.)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கான அறிகுறிகள் தென்படாததாலும், இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எனவே, உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்துடன் ஏக்கருக்கு ரூ.5,000 மானியம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் என்றார். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 41.60 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், நீர்மட்டம் 79 அடியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டுமெனில் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் உயர வேண்டும். மேலும், தினசரி குறைந்தபட்சம் ஒன்றரை டி.எம்.சி நீர்வரத்து இருக்க வேண்டும். இதற்காக கூடுதலாக 12 டி.எம்.சி தண்ணீரும், வினாடிக்கு குறைந்தது 18 ஆயிரம் கனஅடி நீர்வரத்தும் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளில் மொத்தமாக 33.45 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், அவற்றின் மொத்த கொள்ளளவின் 29.08 சதவீதம் மட்டுமே நிரம்பியிருப்பதால் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்படும் வாய்ப்பும் மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் குறுவை சாகுபடி பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறையக்கூடும் என்றும், இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிப்பும் ஏற்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இந்த பாதிப்புகளை சமாளிக்க நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் உழவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும், விதைகள், உரங்கள், நுண்ணூட்டச் சத்துகள் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உழவர்களுக்கும் உச்சவரம்பின்றி குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், 24 மணி நேர தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ