தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு
சென்னை, 06 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, கடலோர கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய ப
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு  இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு


சென்னை, 06 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, கடலோர கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 4.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

இதன் காரணமாக தென்காசி, நெல்லை ஆகிய தென் மாவட்டங்கள் முதல் ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் வரை கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாவட்டங்களைப் பொறுத்தவரை வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதேபோல் கொங்கு மண்டலத்தில் திருப்பூர் மாவட்டத்திலும், தென் மாவட்டங்களான மதுரை மற்றும் விருதுநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

7-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b