Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூன் (ஹி.ச)
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அல்லது பாஜக தேசிய தலைமையின் எந்தவித ஆசீர்வாதமும் இல்லை என்று தெரிவித்தார்.
பாஜக என்பது தனிநபர்களை மையமாகக் கொண்ட கட்சியல்ல; தேசிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் எனக் கூறிய அவர், கட்சியை விட்டு வெளியேறி தனியாக செயல்பட்டு வெற்றி பெற்ற முன்னுதாரணம் இல்லை என்றார்.
அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், “பாஜகவில் இருப்பவர்கள் பாஜகவில்தான் இருக்க முடியும்; ஒரே நேரத்தில் வேறு இயக்கத்தில் செயல்பட முடியாது” என்று கூறினார்.
அண்ணாமலை தனது புதிய இயக்கத்தை பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்துடன் தொடங்கியதாக கூறப்படுவது குறித்து பதிலளித்த நயினார் நாகேந்திரன், “கட்சியிலிருந்து விலகிய பிறகு தேசிய தலைமையின் ஆசீர்வாதம் இருப்பதாக கூற முடியாது” என்றார்.
மேலும், கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் மீண்டும் பாஜகவில் இணையலாம் என்றும், தவறான வழிகாட்டுதலால் சிலர் வெளியேறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
அண்ணாமலை கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறியிருப்பது குறித்து பேசிய அவர், முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய பங்காற்றியதை நினைவுபடுத்தினார்.
தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் கூறிய நயினார் நாகேந்திரன், “2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 11 சதவீத வாக்குகள் பெற்றது. அண்மைய தேர்தல்களில் குறைந்த இடங்களில் போட்டியிட்டு சுமார் 22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்” என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடரும் என்றும், கட்சியில் எந்த உள்கட்சி பிரச்சினையும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக–காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்த அவர், “காங்கிரஸ் எப்போதும் கூட்டணி கட்சிகளை பாதிக்கும் வகையில் செயல்படும் கட்சி. காங்கிரஸை நம்பினால் இதுதான் நிலைமை” என்று கூறினார்.
இறுதியாக, “பாஜக தொண்டர்கள் யாரும் தவறான தகவல்களை நம்பி கட்சியை விட்டு வெளியேற வேண்டாம். சென்றவர்கள் திரும்பி வர விரும்பினால் வரலாம். பாஜக தொடர்ந்து வலுவாக செயல்படும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ