Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜூன் (ஹி.ச.)
நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலக செஸ் அரங்கின் முன்னணி வீரரும் நடப்புச் சாம்பியனுமான Magnus Carlsenஐ ஒரே தொடரில் இரண்டு முறை வீழ்த்தியதோடு, தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சாதனையையும் பிரக்ஞானந்தா நிகழ்த்தியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரரான பிரக்ஞானந்தா, உலக அளவிலான செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, உலக செஸ் அரங்கில் மேலும் பல உயரங்களை எட்டியும், புதிய சாதனைகளைப் படைத்தும் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா பெற்றுள்ள இந்த வரலாற்று வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam