Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாநகரப் பகுதிகளில் நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7.45 நிமிடங்களிலிருந்து 6.14 நிமிடங்களாகவும், நகர்ப்புறங்களில் 11.47 நிமிடங்களிலிருந்து 10.07 நிமிடங்களாகவும், கிராமப்புறங்களில் 14.15 நிமிடங்களிலிருந்து 12.18 நிமிடங்களாகவும், மலைக்கிராமங்களில் 15.41 நிமிடங்களிலிருந்து 14.23 நிமிடங்களாகவும் குறைந்துள்ளது.
மேலும், அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்புகொள்ளும் போது இருந்த சராசரி பதிலளிப்பு நேரம் 11.42 நிமிடங்களிலிருந்து 9.48 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்துதல், விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகள் மற்றும் தொகுப்புகள் குறித்த அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு மூலம் ஆம்புலன்ஸ்களை துல்லியமாக நிலைநிறுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.
இதுவரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பிரசவம் மற்றும் அவசரகால சிகிச்சைகளுக்காக 47.73 லட்சம் பேரும், சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக 37.97 லட்சம் பேரும், பிற வகையான அவசர மருத்துவ உதவிகளுக்காக 1.18 கோடி பேரும் பயன்பெற்றுள்ளனர்.
மொத்தமாக 2.05 கோடி மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ