Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூரைச் சேர்ந்த பரிபூரணம்(வயது 65) இன்று காலை தேவாலயத்திற்குச் செல்வதற்காக முடிச்சூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு நபர்கள், திடீரென மூதாட்டியை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
அவர் சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் இரண்டு சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த மூதாட்டி பரிபூரணம் லேசான காயங்களுடன் அதிர்ச்சியில் உறைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசுவாசப்படுத்தினர். இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக முதியவர்கள், பெண்கள் தனியாக நடமாடவே அச்சப்படும் சூழல் நிலவுவதாகவும், இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b