Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜூன் (ஹி.ச)
திரைப்படத்தில் தோன்றி புகழ் பெற்றவர் தான் தங்களது வெற்றித் தலைவர் என தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்திலேயே தலைவர் கூறியிருந்த நிலையில், அதையே ஏளனமாக விமர்சிப்பது ஏன் என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
தவெக வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
வலுவான மக்கள் இயக்கமாக அதிமுகவை கட்டமைத்த எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக்காத்த ஜெயலலிதாவும் திரைப்படங்களில் தோன்றி புகழ் பெற்றவர்கள்தான் என்றும், அவர்களையும் அவமதிக்கும் வகையில்தான் இந்த விமர்சனம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், “அப்பழுக்கற்ற தொண்டர்களின் இயக்கத்தை அடகு வைத்து கரைந்து காணாமல் போகச் செய்த தீர்ந்துபோன சக்தியை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவிகள் எப்படி மன்னிக்கும்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“கோட் சூட், போட்டோஷூட் என்று பேசுவது மட்டும் பணிவான பேச்சா?” என்றும், “ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களிடம் முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்பது என்ன லாஜிக்?” என்றும் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும், “தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்தால்தான் தடம் மாறி ஓரமாக ஒதுங்கினீர்கள்” எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தங்களது ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்போது, அரசியலில் எதிர்க்கட்சியினர் கரையேற முடியாமல் தத்தளிப்பதை தமிழகம் பார்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு மாவட்டத்தில் கிடைத்த வெற்றியை மட்டுமே பெருமையாகக் கூறுவது, மாவட்ட அரசியலுக்குள் சுருங்கிப் போனதையே காட்டுகிறது என்றும், பொதுத் தேர்தல் குறித்து பேசுவோர் எந்தத் தேர்தல் வந்தாலும் தோல்வியையே சந்திப்பார்கள் என்றும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கட்சியைக் காப்பாற்றவே போராடிக் கொண்டிருப்பவர்கள், மக்கள் விரும்பும் முதல்வரான தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றி விமர்சிப்பதைப் பார்த்து சிறுபிள்ளைகள்கூட சிரிக்கின்றனர்” எனக் கூறி தவெக தனது எக்ஸ் தளப் பதிவை நிறைவு செய்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ