சமையல் எரிவாயு விலை ரூ.29 உயர்வு - உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, 07 ஜூன் (ஹி.ச.) வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக
அன்புமணி


சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)

வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னையில் இதுவரை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.957.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலத்தில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 7-ஆம் தேதி சமையல் எரிவாயு விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் மட்டும் சிலிண்டர் விலை ரூ.89 உயர்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலகட்டத்தில் மக்களின் வருவாய் உயராத நிலையில், எரிவாயு விலை 10.25 சதவீதம் உயர்ந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்திருப்பது உண்மை என்றாலும், அதனால் ஏற்படும் சுமையை முழுமையாக மக்கள்மீது ஏற்றக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பன்னாட்டு சந்தை நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களும் அரசும் சில மாதங்களுக்கு தாங்கிக் கொண்டு, பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam