கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல் – பண்ருட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கைது
பண்ருட்டி, 07 ஜூன் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் நேற்று இரவு மதுபோதையில் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு கடைக்காரரான பிரவீனிடம் கடனுக்கு சிகரெட் கேட்டதாக கூறப
கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல் – பண்ருட்டியில்  ஆட்டோ ஓட்டுநர் கைது


பண்ருட்டி, 07 ஜூன் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் நேற்று இரவு மதுபோதையில் பண்ருட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு கடைக்காரரான பிரவீனிடம் கடனுக்கு சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள கடன் தொகையை காரணம் காட்டி சிகரெட் வழங்க பிரவீன் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், கடைக்காரர் பிரவீனை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் குறுகிய நேரத்தில் வைரலாக பரவி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கடைக்காரர் பிரவீன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வீடியோ ஆதாரங்களை கொண்டு விசாரணை நடத்தி ஆட்டோ ஓட்டுநர் விஜய்யை கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடைக்காரர்கள் மீதான இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்வது வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b