Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச)
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் உடைக்கும் ஆலைகள் (கிரஷர்கள்) காரணமாக திருநீர்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் ஜூலை 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விமல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், திருநீர்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பல கல் உடைக்கும் ஆலைகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக இயங்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் மதுரவாயல் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான கல் உடைக்கும் ஆலைகள் செயல்பட்டு வருவதால், காற்றில் தூசி துகள்கள் அதிகளவில் பரவி சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூசி மாசு காரணமாக சாலைகளில் பார்வைத்திறன் குறைந்து விபத்துகள் ஏற்படுவதுடன், அப்பகுதி மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரித்து வருவதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ