Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகரத்தில் பாதுகாப்பான மற்றும் விபத்தில்லா வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரவு நேர சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைக்காக சென்னை மாநகரம் முழுவதும் 350 போக்குவரத்து காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டனர். மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கும் நோக்கில் நகரின் முக்கிய பகுதிகளில் 120 வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும், முக்கிய சந்திப்புகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு சோதனையின்போது, மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 274 வழக்குகள், அதிவேகம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 101 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1,558 வழக்குகள் என மொத்தம் 1,933 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சாலைப் பயனாளிகளும் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பாதுகாப்பான சாலைகளை உருவாக்க காவல்துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ