Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜூன் (ஹி.ச.)
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜூன் 4-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் பிரச்சினையில் தமிழக அரசு கடந்த காலத்தில் கடைப்பிடித்த நிலைப்பாட்டை தற்போதும் எதிர்காலத்திலும் உறுதியுடன் தொடர வேண்டும். சட்டம்-ஒழுங்கு, மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பது அரசியலமைப்புச் சார்ந்த கடமையாகும். எனவே, சிக்கந்தர் தர்கா அருகே உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என்று சிபிஐ மாநில செயற்குழு கடந்த ஜூன் 5-ஆம் தேதி வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத்தான் விரும்புகின்றனர். கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது” என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது வரவேற்புக்குரியது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடந்த காலத்தில் பின்பற்றிய நிலைப்பாட்டை உறுதியுடன் தொடர வேண்டும். மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடித்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை சிபிஐ மாநில செயற்குழு மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam